இந்நாட்டின் கிராமியப் பாலங்களை நிர்மாணிப்பதற்கு உதவி வழங்குவதற்கு தமது நாடு விரும்புவதாக இந்நாட்டுக்கான இந்தோனேசியத் தூதுவர் குஸ்டி நுக்ரா ஆதியாசா குறிப்பிட்டார். அண்மையில் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் திரு. ஜனக பண்டாத தென்னகோன் அவர்களை அவ் அமைச்சில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் புவியியல் சூழலுக்கு பெருமளவில் சமனான சூழலைக் கொண்ட தமது நாடு கிராமியப் பாலங்களை நிர்மாணிப்பதில் பெற்றுள்ள அனுபவங்களை இந்நாட்டில் கிராமியப் பாலங்களைப் நிர்மாணிக்கும் போது பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட தூதுவர், இரு நாடுகளினதும் செய்து கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் இச்செயற்பாட்டை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தார்.
தற்போது கிராமியப் பாலங்களை நிர்மாணிப்பதற்கு பிரித்தானிய மற்றும் நெதர்லாந்து அரசுகளின் உதவி கிடைப்பதாகவும் அந்த உதவிகளின் கீழ் ஏற்கனவே சுமார் 1300 இற்கும் மேற்பட்ட கிராமியப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் தற்போது சுமார் 500 கிராமியப் பாலங்களின் நிர்மாண வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தூதுவரிடம் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தப் பாலம் நிர்மாணச் செயற்பாடுகளுக்கு உதவி வழங்குவதற்கு இந்தோனேசிய அரசு முன்வந்தமையைப் பாராட்டிய அமைச்சர் இது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு. ஜே.ஜே. ரத்னசிரி உள்ளிட்ட அமைச்சின் உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.