75 ஆவது சுதந்திர தின விழாவின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கீர்த்தியினை கருத்திற்கொண்டு புதிய முறையில், தேசிய நிகழ்வையும் நாடளாவிய கொண்டாட்டங்களையும் ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் நிகழ்வை ஏற்பாடு செய்யும் அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கினார். பொதுநிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 2022.09.14 அன்று நடைபெற்ற 75வது சுதந்திர தின விழா - 2023, குழு உறுப்பினர்களின் பொறுப்புக்கள் பற்றிய கலந்துரையாடலின் போதே பிரதமர் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த அவர்களும் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், 75வது சுதந்திரத்தினம் வழமையான நிகழ்வுளைப் போன்றல்லாது ஒரு விசேடமான சந்தர்ப்பமாகும் என தெரிவித்தார். அதனை கருத்திற் கொண்டு, தேசிய விழாவின் அனைத்துச் செயற்பாடுகளையும் சுதந்திரத்தின் வரலாற்றை உள்ளடக்கிய வகையில் குறைந்த செலவில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்போடும் புதிதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் ஏற்பாடு செய்யுமாறு பணிப்புரை வழங்கினார்.
இவ்வருட சுதந்திர தினத்தை புதிய முறையில் கொண்டாட ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, உள்நாட்டலுவல்கள் பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரியந்த பிரதீப் ரணசிங்க
பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஊடகச் செயலாளர்