அரச சேவையில் நிலவும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரு முறையான வேலைத் திட்டத்தின் தேவை நீண்ட காலமாக உணரப்பட்டு வந்துள்ளது. இத்தேவை சனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அது அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஒரு முன்னுரிமைப் பணியாக மாறியுள்ளது. அதற்கிணங்க குறித்த பொறிமுறையை தயாரிப்பதற்கான அமைச்சரவை விஞ்ஞாபனம் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்களால் 2020/09/25 ஆம் திகதி அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இப்பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் போது அதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதிப் பங்களிப்பை வழங்குவதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பான ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையொன்று அமைச்சில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிராந்தியப் பணிப்பாளர் திருமதி சிம்ரிங் சிங் அவர்களுக்கும் அரச சேவை அமைச்சர் திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்களுக்குமிடையில் நடைபெற்றதுடன் இப்பேச்சுவார்த்தையில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி, அமைச்சின் ஆலோசகர் மஹிந்த மடிஹேவா ஆகியோரும் பங்கேற்றனர்.