சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாதிக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் 23.01.2023 ஆந் திகதியன்று பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரும் பிரதமரும் ஆன திரு. தினேஷ் குணவர்தன அவர்கள் மற்றும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதியத்தின் நூற்றுக்கு 60 வீதப் பங்களிப்பானது ஓய்வு பெற்ற பின்னர் முழுமையாக ஓய்வூதியப் பணிக்கொடையாக செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவையில் உள்ள விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திட்டப் பங்களிப்புத் தொகை ஓய்வூதியப் பணிக்கொடையிலிருந்து அறவிட்டுக் கொள்ளல், அரசினால் விதிக்கப்பட்டுள்ள கட்டாய ஓய்வு பெறச் செய்யும் வயதினை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் ஏற்புடையதாக்கிக் கொள்ளல், முதியோர் மற்றும் அங்கவீனர் கொடுப்பனவுகளை மீள சமுர்த்தி வங்கிகளின் ஊடாக செலுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் போன்ற பல கோரிக்கைகள் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய பிரதமர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்ததுடன், தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு குறித்த உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜகத் குமார அவர்கள், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, மகளிர் மற்றும் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் திருமதி யமுனா பெரேரா ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.