குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள எட்டாம் வகுப்பில் சித்தியெய்திய ஆனால் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் சித்தியெய்தாதவர்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் கடந்த கால அரசு எடுத்த கொள்கை ரீதியான முடிவின்படி ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட 31000 பேருக்கு நீதி வழங்குவதற்கு அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இவ்விடயம் தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் பிரதமருமான திரு.தினேஷ் குணவர்தன அவர்கள், பல்நோக்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி மற்றும் பொது நிருவாக அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் 2023.01.23 ஆந் திகதியன்று அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், இந்த ஊழியர்கள் சுமார் இரண்டு வருடங்களாக பயிற்சியாளர்களாக பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய பிரதமர், உடனடியாக அவர்களை வேறு அரச நிறுவனங்களில் இணைக்க ஏற்பாடு செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அத்தோடு, அவர்களை உடனடியாக பதவியில் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு குறித்த அமைச்சரவைக் குறிப்பை மிக விரைவில் தயாரிக்குமாறும் பிரதமர் அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இச்சந்திப்பிற்கு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. நீல் பண்டார ஹபுகின்ன அவர்கள், பல்நோக்குத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. மேஜர் ஜனரால் நந்த மல்லவாரச்சி அவர்கள், அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ரஞ்சித் அஷோக அவர்கள், இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ். ஆலோகபண்டார ஆகிய அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டார்கள்.
ஊடகப் பிரிவு