அரசகரும மொழிக் கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்துதல், பலமொழிகளைப் பேசும் இலங்கையர்கள் மத்தியில் சகவாழ்வை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக அமையும் என பிரதம மந்திரி தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பல்வேறு இனங்களைக் கொண்ட ஒரு தேசத்தின் ஒற்றுமை பெரும்பாலும் ஒருவருடன் தொடர்பாடல் செய்யும் ஆற்றலிலேயே தங்கியுள்ளது என்று 2023.07.11 ஆம் திகதி கொழும்பு நடைபெற்ற தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்திட்டத்தின் (NLEAP) கருத்தரங்கில் உரை நிகழ்த்தும் போது பிரதம மந்திரி அவர்கள் கூறினார். இதற்காக பயனுறுதிவாய்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் திணைக்களங்களையும் கேட்டுக்கொண்டார். மொழி மனிதர்களின் பறிக்க முடியாத ஒரு உரிமையாகும். கருத்துச் சுதந்திரம், தனது கலாசாரத்தின் படி செயற்படுதல், மொழி உரிமைகள், கல்வி பெறும் உரிமை, அந்தரங்கத்தன்மை மற்றும் ஒன்றுகூடும் உரிமை என்பன தொடர்பாடல் உரிமைகளில் உள்ளடங்கும் என்று பிரதம மந்திரி சுட்டிக்காட்டினார்.
‟ நினைவுகளை ஞாபகப்படுத்தினால், இன்று நான் காலி முகத்திடல் ஹோட்டலில் இருக்கிறேன். இன்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த இடத்திற்கு வெளியே மக்கள் மத்தியில் அராஜக உணர்வு உருவாகிக்க கொண்டிருந்தது. எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் கீழ், மக்களின் ஒத்துழைப்புடன் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும், பொருளாதார ஸ்திரத்தன்மையும் ஏற்படுத்துவதற்கு எங்களால் முடிந்தது. இலங்கையில் அரசகரும மொழிக் கொள்கை
உருவாக்கப்பட்டதன் நோக்கம், இலங்கையர்கள் மத்தியில கலாசாரப் பல்வகைமைக்கான அங்கீகாரத்தை மேம்படுத்துவதாகும். தொடர்பாடல் தடைகளை வெற்றிகொள்வது துரித பொருளாதார அபிவிருத்திக்கும் அதன் நிலையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும் உதவியாக அமையும். அத்துடன், அது வறுமையைக் குறைப்பதற்கும், இலங்கை முழுவதும் பரந்து வாழ்கின்ற சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைப் பேசும் ஆண்களினதும் பெண்களினதும் சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.
NLEAP செயற்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கியமைக்காக கனடா அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்த பிரதம மந்திரி அவர்கள், ஒவ்வொரு தேசிய மொழியினதும் பயன்பாடு தொடர்பில் சம அளவிலான முன்னேற்றத்தை அடையும் குறிக்கோளுடன் இலங்கைக்கு உதவுவதற்காக செயற்திட்டத்தை நீடிப்பதற்கு உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்திட்டத்தின் பணிப்பாளர் மைக்கல் எம்ப்லெம் (Michael Emblem) பேசுகையில், NLEAP செயற்திட்டம் இலங்கையில் பல்மொழிப் பயன்பாடு மற்றும் பாலினத்தை அடிப்படையாக் கொண்ட தடைகளுடன் தொடர்புடைய விசேட சவால்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு அறிஞர்கள், மாணவர், தொழில் வாண்மையாளர்கள் ஆகியோருக்கான ஒரு மன்றமாகச் சேவையாற்றியதாகக் குறிப்பிட்டார்.
கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் அவர்கள் உரையாற்றுகையில், இரு மொழி நாடு என்ற வகையில் கனடா NEALP செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.
இக்கருந்தரங்களில் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, குலசிங்கம் திலீபன், பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக உள்ளிட்ட இராஜ தந்திரிகளும், உத்தியோகத்தர்களும் அறிஞர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.