பெரும்பாலான அரச உத்தியோகத்தர்கள் தமது கலைப் படைப்புக்களை மக்கள்மயப்படுத்தும் வகையில் பிரத்தியேகமான முகநூல் குழுவினரை அறிமுகப்படுத்த பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதான நலன்புரிச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மககெதர பன்ஹிந்த என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த முகநூல் குழுவின் ஊடாக எந்தவொரு அரசாங்க உத்தியோகத்தருக்கும் தமது கவிதை, பாடல், சிறுகதை, நடனம், குறுந் திரைப்படம், சித்திரம், புகைப்படம் போன்ற பல்வகையான கலை அம்சங்களையும் ஜனரஞ்சகப்படுத்துவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த பிரதான நலன்புரிச் சங்கம் முயற்சிகளை எடுத்துள்ளது.
இந்த முகநூல் குழுவின் உத்தியோகபூர்வ வெளியீடு கடந்த (07 ஆந் திகதி) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுகின்ன் அவர்களின் தலைமையில் இவ்வமைச்சில் இடம்பெற்றது. அத்தோடு இதன் மூலம் அரச சேவையில் திறமையான, கலைத்திறன் மிக்க அரச உத்தியோகத்தர்களை உருவாக்க எதிர்பார்ப்பதாக அவர் இந்த நிகழ்வில் குறிப்பிட்டார். இந்த நிகழ்வின் அதிதி உரையை அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம் கெளரவ எழுத்தாளர் திரு. பிரின்ஸ் சேனாதீர அவர்கள் ஆற்றினார்.
ஒவ்வொரு மாத இறுதியிலும் சிறந்த படைப்புக்களைத் தெரிவு செய்து அதற்கான பரிசில்களை வழங்க பொது நிர்வாக அமைச்சின் பிரதான நலன்புரிச் சங்கம் தீர்மானித்துள்ளது.