ஆசியாவின் எதிர்கால அபிவிருத்தியை இலங்கைக்கு வழங்கக்கூடிய நுழைவாயில் திருகோணமலை....
நேற்றைய தினம் (05) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற “புதியதோர் கிராமம் - புதியதோர் நாடு“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் திருகோணமலை மாவட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்...
இப்போது புதிய அறுவடை சந்தைக்கு வந்துகொண்டிருக்கிறது. மிகவும் சிறந்த விலையை பிரகடனப்படுத்தி, எமது நிறுவனங்கள் போட்டித்தன்மையுடன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு வழிசெய்யும் மிகவும் சிறந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வு காண முடியும் என்பதில் நம்பிக்கை உள்ளது. விவசாயிகளுக்கு உணவு உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதால் பத்து மாதங்களுக்கு முன்பே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்த சவாலுக்கு முகம்கொடுத்து நாம் மீண்டும் எழுச்சி பெறும்போது சர்வதேச சமூகம் எமக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது. தடைப்பட்ட பல திட்டங்களின் தடைகளை ஜனாதிபதியால் அகற்ற முடிந்தது. அந்தத் திட்டங்களை மீண்டும் தொடங்கத் தயாராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் முதல் பிரதேச செயலாளர்கள் வரை அதற்கு ஆதரவளிக்க தயாராக இருக்க வேண்டும். இந்தத் திட்டங்களும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுடன் தொடர்புடையவை.
விவசாயத் துறையை மேம்படுத்த விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. விதைகள் வழங்கப்படுகின்றன. அறுவடைகள் கொள்வனவு செய்யப்படுகின்றன. ஆனால் முப்பத்தெட்டு சதவிகிதம் விளைச்சல் வீணாகிறது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பணம் செலவழித்து, உழைத்து, கடனில் மூழ்கி, விளைந்த அறுவடையை நகரத்திற்கு, சந்தைக்கு கொண்டு வர முடியாமல் அவை வீணாகின்றன. இது எம் நாடு எதிர்கொள்ளும் மற்றொரு பாரிய பிரச்சனை. கூடிய விரைவில் அதனை சரிசெய்ய வேண்டும். இந்த விநியோகச் சங்கிலி, அந்த வலையமைப்பு சரியாக நகர வேண்டும். அப்போது விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். பிரதேச செயலாளர்கள் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
பயன்படுத்தப்படாத காணிகளில் தற்காலிகமாக விவசாயம் செய்வதற்கு ஜனாதிபதி தீர்மானம் மேற்கொண்டார். நாங்கள் அறுபது, தொண்ணூறு நாட்களில் விளைச்சலை தரும் நிலத்திற்கு சொந்தக்காரர்கள். உரிய காலத்தில் நீர் கிடைத்தால், நீங்கள் எதை நட்டாலும் அது பலன் தரும். அதனால்தான் பல்வேறு பயிர்களை பயிரிடும் ஆர்வத்தை ஆதரிக்குமாறு அரச இயந்திரங்களுக்கு நாம் தொடர்ந்து அறிவுறுத்துகிறோம்.
நில உரிமைகள் எப்படி இருந்தாலும், நிலத்தில் விவசாயம் செய்யும் உரிமையைப் பெற ஆர்வமுள்ள கிராமப்புற விவசாயிகளுக்கு வசதிகளை செய்துகொடுக்கும் அரசின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் வெற்றிபெற வேண்டும்.
1957 ஆம் ஆண்டு எனது தந்தை பிலிப் குணவர்தன விவசாய அமைச்சராக இருந்த போது செக்கோஸ்லோவாக்கியாவின் உதவியுடன் கந்தளாய் சீனி தொழிற்சாலையை ஆரம்பித்தார். மீண்டும் நாம் அந்த தேசிய பொருளாதாரத்தின் கேந்திரஸ்தானங்களுக்கு திரும்ப வேண்டும்.
ஆசியாவின் எதிர்கால அபிவிருத்திக்கான நுழைவாயில் திருகோணமலை. வங்காள கடற்கரைக்கு அப்பால் உள்ள நாடுகளைப் பார்ப்பதற்கு திருகோணமலையே மிக அருகில் உள்ளது. அதன்படி, அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் பங்கேற்க வேண்டும். துறைமுகத்தைப் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய எதிர்கால கைத்தொழில்களை பிரதேச மக்களின் அபிவிருத்தியாக மாற்றுவதற்கு அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பது மிகவும் முக்கியமானதாகும்.
கிழக்குக் கடற்கரையில் விசேட கைத்தொழில்கள் மற்றும் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களை முன்னேற்றுவதற்கான திட்டத்தை அமைத்து, ஏற்றுமதிக்கான திட்டங்களுக்கு தயாராதல் வேண்டும்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான அசோக பிரியந்த, ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரள, ஏ.எல்.எம். அதாவுல்லா, எம்.எஸ். தௌபிக், யதாமினி குணவர்தன, ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, திருகோணமலை மாவட்ட செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.