அலுவலர்களுக்கு பிரதமரிடமிருந்தான அறிவுறுத்தல்கள்...
பிரதேச நிர்வாகத்தை ஒழுங்குமுறைப்படுத்தலானது உரிய காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்கான அத்தியவசிய விடயமாகிய கிராம உத்தியோகத்தர் பற்றாக்குறையை தீர்த்தலை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் அமைச்சின் உயர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இக்கருத்துக்களை முன்வைத்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், நாட்டின் பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பதில் உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவதனால் குறித்த சேவையின் வினைத்திறன் குறைவாகவே காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். 2021 இல் கோரப்பட்ட பரீட்சைக்கு விண்ணப்பித்த பெருமளவிலான இளைஞர்களுக்கு, இந்த வெற்றிடங்களை நிரப்பாமையினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ள பிரதமர் இந்த ஆட்சேர்ப்புக்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார். அத்துடன், பிரதேச நிர்வாகத்தின் கேந்திர நிலையமான பிரதேச செயலகங்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் பல பகுதிகளிலும் பிரதேச செயலக கட்டிட நிர்மாணப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் விரைவில் ஆராய்ந்து உரிய அபிவிருத்தித் திட்டத்தினை விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்துமாறு அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
தடைகளை பொருட்படுத்தாது பொதுமக்களுக்கு அரச சேவையை ஒழுங்கான முறையில் வழங்குவதே தமது அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்த பிரதமர், அதற்காக தங்களால் இயன்றவரை அர்ப்பணிக்குமாறும் அலுவலர்களுக்குத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அரசாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் அசோக உள்ளிட்ட அமைச்சின் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஊடகப் பிரிவு.