உள்ளுராட்சி நிறுவனங்களில் கடமையாற்றும் உறுதிப்படுத்தப்படாத சிறு ஊழியர்களை உறுதிப்படுத்தும் கொள்கைசார் தீர்மானமொன்றை எடுத்துள்ளதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக திறைசேரியுடன் கலந்துரையாடி வருவதாகவும் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான திரு. தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் 16.11.2023 ஆம் திகதி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறு 8 ஆண்டுகளாக பணிபுரியும் சிறு ஊழியர்கள் சுமார் 13,000 பேர் உள்ளதாகவும், அவர்களுக்கு தற்போது அந்தந்த உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலம் சம்பளம் வழங்கப்படுவதாகவும், எனவே இந்த தொழிலாளர்களை உறுதிப்படுத்தும்போது அரசாங்கத்தின் பணம் செலவாகாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக பிரதமர் இவ்வாறு கூறினார்.
"இந்த கேள்விக்கு ஏற்கனவே பதில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, நாங்கள் இது குறித்து ஆராய்ந்து, இந்த குழுவை உறுதிப்படுத்த திறைசேரியுடன் கலந்துரையாடி வருகிறோம். ஏனெனில் மேற்படி உள்ளூராட்சி நிறுவனங்களால் வகிக்கக் கூடிய மற்றும் வகிக்க முடியாத இடங்கள் உள்ளன. எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏற்கனவே கொள்கைசார் முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் எஞ்சிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்"