பிரதமர் தினேஷ் குணவர்தன
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி சட்டங்களை நிகழ்கால சமூகத்தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட துணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைச் செயற்குழுவில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் சேவைகளை மிகவும் பயனுள்ள வகையில் மேற்கொள்வதற்கு, அந்த நிறுவனங்களின் பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த உத்தியோகத்தர்களின் இடமாற்றம் பாரிய பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளமையினால் குறித்த உள்ளூராட்சி நிறுவனங்களில் ஒவ்வொரு விடயத்துறை தொடர்பிலும் பணம் செலவு செய்து பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்கள் குறைந்தது சுமார் 5 வருடங்கள் அந்தப் விடயத்துறையில் பணியாற்ற வேண்டும் என கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுதத் மஞ்சுள அவர்களால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவு மற்றும் நிகழ்காலத்தில் இடம்பெறுகின்ற விரைவான நகரமயமாக்கலின் மத்தியில் உள்ளூராட்சி சட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய சிற்சில மாற்றங்கள் தொடர்பில் பரிந்துரைகளைப் பெறுவதற்கு மேற்படி துணைக் குழு நியமிக்கப்பட உள்ளது.
தற்போது மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்கும் உள்ளுராட்சி நிறுவனங்களின் அன்றாட செயற்பாடுகளை மிகவும் ஜனரஞ்சகமான முறையில் நிறைவேற்றுவதில் பிரதமர் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இயற்கை அனர்த்தங்கள் மற்றும் டெங்கு நோய் போன்ற பிரச்சினைகளின்போது சில உள்ளுராட்சி மன்றங்கள் மந்த நிலையில் செயற்படுவதால் மக்கள் மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாவதாகவும் எதிர்காலத்தில் அதனைக் குறைப்பதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளில் நீண்டகாலமாக கடமையாற்றும் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படாமல் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு இணையாக இடமாற்ற நடவடிக்கையில் உள்வாங்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் அறிவுரை வழங்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் பணம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் அங்கீகாரத்துடன் செலவிடப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்தார்
பிரதமரின் வவுனியா விஜயத்தின் பலனாக தாமதமடைந்திருந்த பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் தற்போது துரிதமாக இடம்பெற்று வருவதாகவும், அது தொடர்பில் பிரதமருக்கு விசேட நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கே. திலீபன் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக ஒரே நிலையத்தில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களை இனத்துவதிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கே. கருணாகரம் முன்வைத்த ஆலோசனையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான திரு.அசோக பிரியந்த, திரு.ஜானக வக்கும்புர மற்றும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.