தனியார் துறையில் செயல்படுத்தப்பட்ட கூட்டு முயற்சிகள் மூலம் விளைதிறனை அதிகரிக்கும் எண்ணக் கருவினை பொதுத்துறையில் அறிமுகப்படுத்துகிறோம்... - கௌரவ பிரதமர் திரு. தினேஷ் குணவர்தன
இன்று (2024.03.14) களனி- மஹரவில் நிர்மாணிக்கப்பட்ட நிலாபியஸ வீடமைப்புத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
- அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் –
அரசாங்கமொன்றின் முறையான இருப்புக்கு வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்க பொதுச் சேவையொன்றினை உறுதிப்படுத்த வேண்டும். பொதுச் சேவைக்கு, தகைமைகளுடன் கூடிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச்செய்வதோடு அவர்களுக்கு முறையான பயிற்சியளித்து நிறுவனமயமாக்குவது மாத்திரமன்றி தொடர்ச்சியான செயலூக்கத்துடன் கூடிய சேவையொன்றினைப் பெறுவதற்கு அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக வசதிகளையும் வழங்குவது மிகவும் முக்கியமானதாகும்.
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை வழங்கும் இந்த வேலைத்திட்டம் ஆரம்ப காலங்களில் தூர மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வரையறுக்கப்பட்ட நகர்ப்புறங்களில் உள்ள தனியார் சொத்து நிலங்களைக் கையகப்படுத்தி உத்தியோகபூர்வ வீடமைப்புத்தொகுதியை நிர்மாணிப்பதற்கு அதிக பணம் செலவிடப்படுகிறது. எனவே, முடிந்தளவு அரச காணிகளைப் பயன்படுத்துவதே எமது எண்ணமாகும். நாம் முன்பை விட அதிகளவான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டங்களைத் தொடங்குவதன் மூலம், பொதுச்சேவைக்குத் தேவையான விடுதி வசதிகளை இயன்றவரை ஏற்படுத்தித் கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேபோல், அவர்களது சேவையை இலகுவாக மேற்கொள்ளவும் முப்பத்திரண்டு இல்லங்கள் இவ்வாறு தற்போது உங்களுக்கு உரித்தாகின்றன.
பொது நிர்வாகத்தின் நிறைவேற்று உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் அண்மையில் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் அவ்உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு நடைமுறைக் கோரிக்கைகளை நாம் கருத்திற் கொண்டு அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நிறைவேற்று உத்தியோகத்தர்கள் மற்றும் ஆட்சியமைப்பினால், பரஸ்பர புரிந்துணர்வுடனும், பொறுப்புடனும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் எதிர்கொள்ளப்பட்டன. அதன் மூலம் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க முடிந்தது. அத்தகைய அவசரகாலச் சூழ்நிலைகளால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள் எழும் இச்சந்தர்ப்பத்தில் நாம் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். அந்த நம்பிக்கை பொதுச் சேவையில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பின் மூலமே உருவாக்கப்பட்டது.
கூட்டு முயற்சிகளின் மூலம் விளைதிறனை அதிகரிக்கும் எண்ணக்கரு இதுவரை தனியார் துறையில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த எண்ணக்கருவினை பொதுத்துறையில் கொண்டு வருவதற்காக உலக தொழிலாளர் அமைப்புடன் இணைந்து புதிய முயற்சியில் ஈடுபட அமைச்சரவை முடிவு செய்தது. எனவே, பொதுச்சேவையில், பொதுச்சேவையின் பல்வேறு திணைக்களங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து, புதிய சிந்தனைகளுடன், தங்கள் வசதிகள், உரிமைகளை வெற்றி கொண்டு, தாம் எதிர்பார்க்கும் எதிர்கால முன்னேற்றத்துக்குள் நுழைய முடியும் என்று நான் நம்புகிறேன்.
இராஜாங்க அமைச்சர்களான அசோக பிரியந்த, சிசிர ஜயகொடி, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் பிரதீப் விதான, யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.